சென்னை,
மதுரை கோட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட நேர வழித்தடத் தடை (Fixed Time Corridor Block) மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, சில ரெயில்களின் வழித்தடம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (ரெயில் எண் 16128), அக்டோபர் 11, 13, 15, 20, 22, 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்படும்.
இந்த ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும்.
இதனால், வழக்கமான மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் ரெயில் நிற்காது.
அதே நேரத்தில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் (ரெயில் எண் 16321), அக்டோபர் 12, 14, 16, 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.
இந்த ரெயிலும் மாற்றுப்பாதையில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் வழியாக இயக்கப்படும்.
இதனால், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாலையம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
மாற்றாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் காரணமாக மேற்கண்ட தேதிகளில் ரெயில்களின் வழித்தடம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிடும் முன் மாற்றப்பட்ட ரெயில் சேவை விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.