கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

வாக்குறுதி

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

வெற்றிப் பயணம்

தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதோடு, வெற்றிப் பயணத் திட்டம், இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.6 ஆயிரம் கோடி

இத்திட்டத்தின் கீழ் திருநரும் (திருநங்கைகள்) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.

12,695 பேருந்துகள்

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

அதாவது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில், 12,695 பேருந்துகள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். அதுபோல், மொத்தமுள்ள நடைகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.

இன்று தொடக்கம்

வெற்றிப் பயண பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடனான (இ.டி.எம்.) இணைப்பு பணி நிறைவடைந்துள்ளது. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதியன்று சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடையலாம்.

SCROLL FOR NEXT