தமிழக செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்களை மண் தரையில் அமர வைத்தது கண்டனத்துக்குரியது - வானதி சீனிவாசன்

பெற்றோர்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது நிர்வாகத் தோல்விக்கு சாட்சி என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மனித உரிமை மீறல்

கோவையில் இன்று நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைக் காண வந்த பெற்றோர்கள், அரங்கிற்கு வெளியே மண் தரையில் அமர வைக்கப்பட்ட அவல நிலை கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் சாதனையை கொண்டாட வேண்டிய இனிய விழாவில், அவர்களின் பெற்றோர்களுக்கே அடிப்படை மரியாதையும், உரிய வசதியும் வழங்கப்படாதது சட்டம் கற்றுத் தரும் உன்னத இடத்திலேயே ஏற்பட்ட மனித உரிமை மீறலாகும்.

தங்கள் பிள்ளைகள் பட்டம் பெறும் பெருமைமிகு தருணத்தை நேரில் கண்டு மகிழ வேண்டிய பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் வெளியே காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அரசுக் கல்லூரிகளின் நிர்வாகத் தோல்விக்கு சாட்சி.

நடவடிக்கை..

இனி இதுபோன்ற அவலங்கள் நடைபெறாத வகையில், அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு நடைபெறுவதற்கு முன்கூட்டியே தகுந்த ஏற்பாடுகள் செய்து, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.