தமிழக செய்திகள்

சென்னையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கிய வழக்கில் மலேசிய பெண் கைது: பரபரப்பு தகவல்கள்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மலேசிய பெண் கைது செய்யப்பட்டார்.

500 ரூபாய் கள்ளநோட்டுகள்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள், கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நோட்டை பதுக்கி வைத்திருந்ததாக, ஷபீக்ரகுமான் (வயது 37) என்ற 'டிராவல்ஸ்' அதிபர் கைது செய்யப்பட்டார். அவரது 'டிராவல்ஸ்' நிறுவனம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது.

அவரிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், ரூ.11.21 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகளும் மற்றும் 25 ஆயிரம் ‘யூரோ கரன்சி' நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இவர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் உண்மையான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரிடம் இருந்தும் ரூ.34 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மலேசியாவில் அச்சடிப்பு

இவர்களிடம் கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே உள்ளன. இந்த கள்ள நோட்டுகளை மலேசியாவில் அச்சடித்ததாக தெரியவந்துள்ளது. கைதான ரவிச்சந்திரன், மலேசியாவில் சில காலம் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். அப்போது கள்ளநோட்டு கும்பலோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த பரிமளா, புவனேஸ்வரி ஆகிய 2 பெண்கள் இந்த கள்ளநோட்டு கும்பலோடு தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் மாம்பலத்தில் உள்ள ஒரு லாட்ஜில்' தங்கியிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, பரிமளா தப்பி ஓடிவிட்டார். புவனேஸ்வரி மட்டும் போலீசாரிடம் மாட்டினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விமானத்தில் கள்ளநோட்டுகள்

கள்ளநோட்டுகள் மலேசியாவில் இருந்து, விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் எப்படி கொண்டு வந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. தப்பி ஓடிய பரிமளாவுக்குதான் அதுபற்றிய விவரம் தெரியும் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். பரிமளா மலேசியா தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். ரூ.1.10 கோடி அளவுக்கு, மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவற்றில் ரூ.34 லட்சம் வரை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். மீதி கள்ளநோட்டுகள் என்ன ஆனது? எனவும் விசாரணை நடக்கிறது.

புவனேஸ்வரி கைது

இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிய மலேசிய பெண் புவனேஸ்வரி(48) நேற்று முறையாக கைது செய்யப்பட்டார். தப்பி சென்ற பரிமளாவும், புவனேஸ்வரியும் சேர்ந்து கள்ளநோட்டுகளை மலேசியாவில் இருந்து தமிழகம் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது. மலேசியா தப்பி சென்ற பரிமளாவை, சர்வதேச போலீஸ் உதவியுடன் கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் மலேசியா போன்ற வெளிநாட்டு தொடர்பு விவரங்கள் வருவதால், திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும்...

இந்த வழக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மட்டுமல்லாது, 100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும் சிக்கியுள்ளதாக போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரிடம் இருந்தும், பல்வேறு பெயர்களில் 16 'பாஸ்போர்ட்டுகளும்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.