தமிழக செய்திகள்

முதுமலை புலிகள் சரணாலயத்தில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

மாயார் நீர்வீழ்ச்சி சாலை சந்திப்பு அருகே ஆண் யானை ஒன்று சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் சரணாலயப் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான தினசரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயார் நீர்வீழ்ச்சி சாலை சந்திப்பு அருகே ஆண் யானை ஒன்று சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்த யானைக்கு சுமார் 4 வயது இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய இன்று அதற்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

யானை நோய்வாய்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.