தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 20 மூட்டை வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மூப்பர்கோவில் பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், இன்று (வியாழக்கிழமை) போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு எவ்வித அரசு அனுமதியுமின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடிகளைத் தயாரித்து வந்த விஜயபாண்டியன் (வயது 36) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக, அந்தபகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 20 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களைக் கையாண்டது மற்றும் அனுமதியின்றி வெடி தயாரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க இத்தகைய சோதனைகள் தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.