தமிழக செய்திகள்

கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டு காதல் மனைவியை கொன்ற வாலிபர் கைது: மண்டை ஓடு-எலும்புகள் மீட்பு

திருநெல்வேலியில் 2-வது திருமணம் செய்ததை கண்டித்ததால் காதல் மனைவியை கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டு கொலை செய்த வாலிபர் ஓர் ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலியில் 2-வது திருமணம் செய்ததை கண்டித்ததால் காதல் மனைவியை கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டு கொலை செய்த வாலிபர் ஓர் ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அப்பெண்ணின் மண்டை ஓடு-எலும்புகள் மீட்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதல் மனைவி

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கொண்டாநகரைச் சேர்ந்த மகாராஜா (வயது 38) என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமராவதி(34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த அமராவதி கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரது தாயார் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடந்த 23-ந்தேதி (23.9.2026) சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்குவாரி குட்டையில் தள்ளி கொலை

மகாராஜா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அமராவதியை கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பான்குளம் பகுதிக்கு அழைத்துச்சென்று சரமாரி அடித்து அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதையடுத்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரிஜித் மேரி தலைமையிலான போலீசார் நேற்று மகாராஜாவை சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச்சென்றனர்.

மண்டை ஓடு-எலும்புகள் மீட்பு

கல்குவாரியில் மகாராஜா காண்பித்த இடத்தில் நடத்தப்பட்ட தேடுதலில், அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் இதர எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டன. அவற்றை கைப்பற்றிய போலீசார், அமராவதியின் எலும்புகள்தான் என்பதை உறுதி செய்ய ஆய்வகத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் சாஸ்திரியும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி தடயங்களை சேகரித்தார்.

2-வது திருமணம்

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஏற்கனவே அமராவதியை காதல் திருமணம் செய்த மகாராஜா கடந்த 2024-ம் ஆண்டு அகிலா(23) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அமராவதி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மகாராஜா 2025-ம் ஆண்டு மே மாதம் அமராவதியை தனது பைக்கில் பாப்பான்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மகாராஜா, அமராவதியை சரமாரி அடித்து கல்குவாரிக்குள் தள்ளி கொலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

ஓர் ஆண்டுக்கு பிறகு கைது

தற்போது அவர் கங்கைகொண்டான் பகுதியில் வசித்து வந்தார். முதல் மனைவியின் மகன்களிடம் அமராவதி வெளியூருக்கு சென்றிருப்பதாக கூறி சமாளித்து வந்துள்ளார். ஆனால் அமராவதியின் தாய் புகார் அளித்த பிறகுதான், ஓர் ஆண்டுக்கு பிறகு மகாராஜா போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து மகாராஜாவை கங்கைகொண்டான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT