தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் (வயது 40), தொழிலாளி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முனுசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சந்திமாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு ஊர்வலம் இரவு நேரத்தில் வடக்குத் தெரு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள் மற்றும் முனுசாமி ஆகிய 2 பேரின் குடும்பத்தினரும் தங்களுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த பெருமாள், முனுசாமியின் மனைவி கனகலட்சுமியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கனகலட்சுமி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பெருமாள், அவருக்குக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், பெண்ணிற்கு அவதூறு மற்றும் கொலைமிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெருமாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.