ஈரோடு,
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் வாலிபர் ஒன்றரை வயது குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நெய்க்காரபட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (27 வயது). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வித்தியா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சாய் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது. குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை சாய் ரித்விக்குடன் வித்தியா தனியாக சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வித்தியாவுடன் சண்டை போட்டு கொண்டு சாய் ரித்விக்கை விஜயகுமார் தூக்கி சென்றுவிட்டார். அதன் பின்னர் ஆட்டையாம்பட்டியில் உள்ள தந்தை மற்றும் சகோதரிகளின் பொறுப்பில் குழந்தையை விஜயகுமார் விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது சகோதரியிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு விஜயகுமார் வெளியே சென்றுள்ளார். பின்னர் மனைவி வித்தியாவுடன் சேர்ந்து வாழமுடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சகோதரிக்கு அவர் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினார். மேலும் லொகேஷனையும் அனுப்பி இருக்கிறார்.
பின்னர் மனைவி வித்தியாவையும் செல்போனில் தொடர்பு கொண்டு ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி - வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்குபட்ட பகுதிக்கு நள்ளிரவு வந்தார்.
அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரெயிலின் முன் குழந்தை சாய் ரித்விக்குடன் பாய்ந்தார். இதில் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சாய் ரித்விக்கும், விஜயகுமாரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.