தமிழக செய்திகள்

மகளை கொலை செய்து சிறை சென்றவர்... ஜாமீனில் வெளியே வந்து மனைவியை வெட்டிக் கொல்ல முயற்சி - சென்னையில் பயங்கரம்

குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சதீஷ் கடந்த ஆண்டு தனது மகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை,

சென்னையில் பெற்ற மகளை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நபர், ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பெரம்பூரை சேர்ந்த ரெபேக்கா என்ற பெண், கீழ்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கணவரின் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து கோரி கோர்ட்டில் ரெபேக்கா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ரெபேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, குழந்தையை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சதீஷ் கடந்த ஆண்டு தனது மகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சதீஷ் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சம்பவத்தன்று ரெபேக்கா வேலை செய்யும் வங்கிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவின் தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரெபேக்கா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுபுறம் சதீஷை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.