சென்னை,
இணையவழி இசைவாணை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை (OCMMS) உதவி மையத்தை (Help Desk) அமைச்சர் ராஜீவ் இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், டாக்டர் வே. க. ராஜீவ் சென்னை, கிண்டி, மவுண்ட் சாலை, எண் 76-இல் அமைந்துள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தின் 3-ஆம் தளத்தில் நிறுவப்பெற்றுள்ள இணையவழி இசைவாணை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை (OCMMS) உதவி மையத்தை (Help Desk) 09.10.2026 இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை (Consent) மற்றும் அங்கீகாரம் (Authorization) / நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் பூர்த்தி செய்தல் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்தல் குறித்த சந்தேகங்களுக்கான வழிகாட்டுதலைப் பெறவும், காலதாமதங்கள் மற்றும் நேரடி வருகையைக் குறைத்து, தற்போதைய நடைமுறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டும் இத்திட்டம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
இணையவழி இசைவாணை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை (OCMMS) வழியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கான தெளிவுரைகள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான உதவிகளுக்கு, தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோர் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை, 044-43722000 என்ற தொலைபேசி எண்/helpdesk@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் வழியே இவ்வுதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோர் இம்மையத்திற்கு நேரடியாக வருகைபுரிந்து தங்கள் சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.