சென்னை,
ஓசோன் படலம் என்பது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு இயற்கை வாயு பாதுகாப்பு கவசம் ஆகும். இது சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புற ஊதா கதிர்களை உறிஞ்சி, பூமியில் உள்ள மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங் கினங்களைப் பாதுகாக்கிறது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள வளிமண்டல அடுக்கில் அமைந்துள்ளது. ஓசோன் என்பது 3 ஆக்ஸிஜன் அணுக்களால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும்.
சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் சுமார் 97 முதல் 99 சதவீதம் வரை இது உறிஞ் சிக்கொள்கிறது. இந்த ஓசோன் அடுக்கு 1913-ம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்களான சார்லசு பாப்ரி மற்றும் ஹென்றி புய்சன் ஆகியோரால் கண்டறியப்பட்டது.
மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் குளோரோபுளோரோ கார்பன்கள் மற்றும் பிற ரசாயனங்கள் வளிமண்டலத் தில் சேர்ந்து ஓசோன் அடுக்கை மெலிதாக்குகின்றன. இதனால் புற ஊதா கதிர்கள் பூமியை அடைந்து தோல் புற்று நோய். கண்புரை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதேபோல வாகனப் புகை. தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் வேதிவினையால் தரைப் பரப்புக்கு அருகில் அதிகரிக்கும் ஓசோன் மூலக்கூறுகள், காற்று மாசுபாட்டை குறிக்கிறது.
அந்த வகையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே 19-ந்தேதி சென்னை மணலி பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 500 மைக்ரோகிராம் என்ற அளவில் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு நாட்டிலேயே பதிவான மிக உயர்ந்த காற்றுமாசு அளவாகும். வடசென்னையில் உள்ள மணலி பகுதியில் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.