சிவகங்கை,
மானாமதுரை அருகே சட்டக்கல்லூரி மாணவனை காதல் விவகாரத்தால் பெண்ணின் தந்தை மற்றும் தம்பி கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் முருகேசன் (வயது 50) என்பவரின் மகளை காதலித்து வந்தார். ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா(19) இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை கொலை செய்வதற்காக சென்றுள்ளார் . இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.