தமிழக செய்திகள்

மானாமதுரை: போலீசார் சட்டவிரோதமாக துன்புறுத்தியதில் கைதி இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்து சென்றபோது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர்(36). இவர்கள் நண்பர்கள் ஆவர். ஜெயக்குமார் கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அழகர் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ம் தேதி இரவு ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மானாமதுரை சியோன் நகரில் உள்ள சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஜெயக்குமார் மற்றும் அழகரை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெட்டினர். அதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அந்த கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யிருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குணா, ஆகாஷ் டெலிசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதில் ஆகாஷ் டெலிஷன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றபோது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக துன்புறுத்தியதில் கைதி இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.