மதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் என்ற டெலிசன் (24) உள்பட 2 பேரை கைது செய்தனர்.
இதில் ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தபோது அவரு டைய கால் எலும்பு முறிந்தது. அவரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்
இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மானாமதுரை நான்கு வழிச்சாலையில் கூடினர். அங்கு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆகாஷ் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவரது சாவுக்கு காரணமான போலீசாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மூச்சுத்திணறல் காரணமாக ஆகாழ்ஹ் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலயில், வாலிபர் ஆகாஷின் காவல் மரணம் தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது காவல் நிலைய சிசிடிவிகளை பாதுகாப்பது, உடற்கூராய்வு வீடியோ பதிவு ஆகிய மனுதாரரின் கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்டுள்ளதால், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்னிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் விரைவாக உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டு, விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைத்தனர்.