சென்னை,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி நல்லாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மது வணிகம் செய்வதற்கான மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சிகளை பாமக முறியடித்து வந்த நிலையில் அங்கு மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டிருப்பதும், அதற்கு ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துணை போயிருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
நல்லாம்பட்டி கிராமத்தில் நீண்ட காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாத நிலையில், அங்கு புதிய மதுக்கடையை திறக்க கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில் தான் நரியை பரியாக்குவதைப் போல நேரடியாக மதுக்கடையை திறப்பதற்கு பதிலாக மனமகிழ் மன்றம் அமைத்து அதன் மூலம் மது வணிகம் செய்யலாம் என்று திட்டமிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முந்தைய ஆட்சியாளர்களின் உதவியுடன் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உரிமம் பெற்றார். ஆனாலும் பாமக மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் மனமகிழ் மன்றத்தை திறக்க முடியவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த மே 28-ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் யூனியன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு மதுவணிகம் செய்யப்பட்டு வருகிறது. மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 30-ம் தேதி ஊர்மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து மனமகிழ் மன்றத்தை மூட வேண்டிய அதிகாரிகள், மனமகிழ் மன்றத்தை நடத்துவோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, விவேகானந்தர் இளைஞர் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் 6 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், யூனியன் மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வாங்கியும் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படாத நிலையில், இப்போது அது திறக்கப்பட்டதன் பின்னணியில் பென்னாகரம் தொகுதி ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும், அவர் தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மனமகிழ் மன்றத்தைத் திறக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மனமகிழ் மன்றத்திற்கான உரிமத்தைப் பெற்றுள்ள பிரகாஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சந்துக்கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மதுவணிகம் செய்து வந்தவர் என்றும், நல்லாம்பட்டி பகுதியில் மதுக்கடைத் திறக்க பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான உரிமத்தை வாங்கினால், அதைக் கொண்டு நேரடியாக மது வணிகம் செய்யலாம் என்று டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் யோசனைத் தெரிவித்த நிலையில், அவர்களையும், தமது சகோதரர் முருகவேலையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு இந்த மனமகிழ் மன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டத்தை மீற டாஸ்மாக் ஊழியர்களே துணை போயிருப்பதை அனுமதிக்க முடியாது.
முதல்-அமைச்சராக இருக்கும் விஜய் தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ஆட்சிக்கு வந்த இரு நாள்களில் 717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டார். ஆனால், அவரது கொள்கையை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஆளும்கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மது வணிகத்திற்கு துணை போயிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது தான் தமிழத்தில் இன்று நிலவும் குழப்பங்களுக்கு காரணமாகும். ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிக் கொண்டு இன்னொருபுறம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரே ஒரு மதுக்கடை கூட திறக்கப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கு எதிரான வகையில் நல்லாம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்; மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.