தமிழக செய்திகள்

நடப்பு ஆண்டில் மாம்பழ சீசன் தள்ளிப்போகிறது: மாம்பழ பிரியர்கள் அதிர்ச்சி

மாம்பழ சீசன் இந்த ஆண்டு தாமதமாகவே தொடங்கும் என்று தெரிகிறது.

சேலம்,

முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ சீசன், தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை நீடிப்பது வழக்கம். அந்த வகையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் 10 லட்சம் டன் அளவுக்கு மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ள மாம்பழங்கள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாம்பழக் கூழ் குளிர் பானம் தயாரிப்புக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்ததால், மாம்பழக் கூழ் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு தேக்கம் அடைந்ததால், மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவதால், கப்பல் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மாம்பழக் கூழ்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு இப்போதுதான் மாமரங்கள் பூக்கத் தொடங்கி இருக்கின்றன. எனவே, மாம்பழ சீசனும் இந்த ஆண்டு தாமதமாகவே தொடங்கும் என்று தெரிகிறது. இதனால், மாம்பழ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.