கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மாம்பழம் சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் - ராமதாஸ்

ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் எதிரான செயலை தேர்தல் ஆணையம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாம்பழம் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமூக நீதி, இட ஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் ஆகியவைகளை முக்கியக் கொள்கைகளாக உழைக்கும் மக்களை கொண்டு 16.07.1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சியை என்னை நிறுவனராகக் கொண்டு மிகப்பெரும் மக்கள் ஆதரவோடும், எழுச்சியோடும் என்னால் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் கடந்த 37 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை ஓடி ஓடிச் சென்று வீதி தோறும் மக்களை சந்தித்தும், மக்களை திரட்டியும் பல்வேறு தரப்பு மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தி, நான் உட்பட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறைக் கொடுமைகளை அனுபவித்து, இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றி வருகிறேன்.

பாட்டாளிகளும் அரசியல் அதிகாரங்களை பெற வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு பல மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், நகர மன்றத் தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளையும் உருவாக்கினேன். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்திமிக்க இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுத்தேன். இது பாட்டாளி சமூகத்திற்கு வளர்ச்சியை தந்தது.

இந்த நிலையில் என்னால் வளர்க்கப்பட்டவர்கள், என்னை புறந்தள்ளி கட்சியை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு, போலியான ஆவணங்களை உருவாக்கி, வளர்த்த கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் உருவாக்கிய போலியான ஆவணங்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் முறைகேடான வழிகளைக் கையாண்டு தங்களின் சுயநலத்திற்காக கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியையும், அதன் கொடியையும், சின்னத்தையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பலமுறை நீதிமன்றங்களில் முறையிட்டும், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையம் சதிகாரர்களின் சதிச் செயலுக்கு துணை போகும் வகையில் அதன் நடவடிக்கைகள் உள்ளன.

2026 சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற இந்த நேரத்தில் என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு வழங்கக்கூடாது என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டதன் பேரில் " அன்புமணிக்கு எந்த அடிப்படையில் மாம்பழம் சின்னத்தை வழங்கினீர்கள்?" என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியதுடன், 3 நாட்களில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால் தேர்தல் ஆணையமோ பாரபட்சமாக, ஒருதலைபட்சமாக, கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக உரிமையியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அங்கீகாரமற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.

ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் எதிரான இந்த செயலை தேர்தல் ஆணையம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்ப பெற வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நேர்மையான அளவில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமே தவிர, ஜனநாயகத்துக்கு விரோதமாக, ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.