சென்னை,
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் 9-ந்தேதி(நாளை) விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்தியாவின் இறையாண்மையையும், கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 12-ந்தேதி கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் தோற்கடித்தன. மீண்டும் தற்போதுள்ள எண்ணிக்கையோடு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஆசைகாட்டி புதிய மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.
இதன்படி பார்த்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய திட்டத்தின்படி இது 120 ஆக உயரும். அதேபோல, தமிழ்நாடு 39 இல் இருந்து 58 ஆக உயரும். உத்தர பிரதேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உண்டான இடைவெளி 41-ல் இருந்து 62 ஆக உயரும். ஒரு பன்முக கூட்டாட்சியில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வெறும் எண்களின் விகிதாச்சாரத்தை கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது என்பதை கடந்த காலங்களில் 1976 இல் இந்திரா காந்தியும், 2001-ல் ஏ.பி. வாஜ்பாயும் கொண்டு வந்த திருத்தங்களின் மூலமாக மக்களவை எண்ணிக்கை விரிவாக்கம் முடக்கப்பட்டது.
அந்த முடக்கத்தை நீக்குவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பு தொகுதி மறுவரையறை செய்தால் பட்டியலின, பழங்குடியின பெண்கள் இடஒதுக்கீட்டு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது. ஒட்டுமொத்தத்தில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறித்து விடும்.
கூட்டாட்சி, ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களை குழிதோண்டிப் புதைத்துவிடும். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் துரோகமாகும். அப்படிப்பட்ட கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், விடுதலைப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று, தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்வதென மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு பலூன்களுடன் அமைதிப் பேரணி நடத்தப்படும். பேரணியின் இறுதியில் காந்தி சிலை அருகில் இரண்டு பலூன் காட்சி பதாகைகள் அமைக்க வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு முன் என்ற பதாகையும், தொகுதி மறுவரையறைக்குப் பின் என்று மற்றொரு பதாகையும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அல்லது மூத்த நிர்வாகி, 50 சதவிகித உயர்வு அனைவருக்கும் சமநீதியை வழங்காது, ஏற்கனவே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்ற கருத்தை விளக்கி பதாகைகளில் உள்ள விவரங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தப்படும்.
அதேபோல, ஆகஸ்ட் 12 அன்று மாணவர்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து பாதைகளில் கண்பார்வைக்குத் தெரியும் உயரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்படும். அதிக மக்களை சென்றடைய பலூன் உருவகத்தை மையமாக கொண்டு குறும் படங்கள் மற்றும் போஸ்டர்களை வலைதளங்களில் ஒரே நேரத்தில் பதிவிட வேண்டும்.
விடுதலைப் போராட்ட உணர்வுகளை எழுப்புகிற வகையில் ஆகஸ்ட் 9 அன்று தொடங்கி நடைபெறுகிற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வெற்றி பெற தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.