தமிழக செய்திகள்

டெல்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் அழைப்பு

நாடு முழுவதும் எதிரொலிக்கின்ற வகையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி - அமித்ஷா ஆலோசனையின் பேரில் தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ்குமாருடன் இணைந்து கூட்டு சதித் திட்டம் தீட்டி செயல்பட முடிவெடுத்தனர். இதன்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் ஏறத்தாழ 13 கோடி வாக்காளர்களை நீக்கி அதன்மூலம் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்தது நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அம்பலப்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் பேரணி

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை முதன் முதலில் எழுப்பியவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தான். தொடர்ந்து இக்குற்றச்சாட்டுக்களை மக்கள் மன்றத்தில் எழுப்பியதால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து தலைநகர் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் வரலாறு காணாத பேரணியை தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வாக்கை காப்போம் - நாட்டை காப்போம் என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கின்ற வகையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லி பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வரும்படி தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.

தீவிர நடவடிக்கை

நவம்பர் 1 இல் ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணி ஆளுங்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், பேரணி நடைபெறுவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த தடைகளை உடைத்து குறைந்தபட்சம் 10 லட்சம் பேரை திரட்டுகிற தீவிர முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் பெருந்திரளானோரை அணிதிரட்டுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் மல்லிகார்ஜுன் கார்கே வழிகாட்டுதலின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணியின் மூலமாக பேரணி மிகப்பெரிய வெற்றியடைவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஓயாது...

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1 இல் நடைபெறும் பேரணியின் குறிக்கோள் மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், சிறப்பு தீவிர திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தேர்தல் ஆணைய இணையதளம் புதுப்பிக்கப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும், அதன் விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து சுயேட்சையான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேறுகிற வரை எந்தவிதமான திருத்தமும், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளக் கூடாது. இதுவே தலைநகர் டெல்லியில் நடைபெறுகிற பேரணியில் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்படுகிற கோரிக்கையாகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது, தலைவர் ராகுல்காந்தி ஓயமாட்டார்.

மாணிக்கம் தாகூர் அழைப்பு

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை தடுத்து நிறுத்தாமல் தேர்தல்கள் நியாயமாக, நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷா - ஞானேஷ்குமார் ஆகியோரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிற பேரணிக்கு தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். உடனடியாக இன்றே தலைநகர் டெல்லியை நோக்கி அணி அணியாக புறப்படுவோம். தலைநகர் டெல்லியில் தமிழக காங்கிரசின் வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரண்டு வரும்படி மீண்டும் வலியுறுத்தி உங்களை அழைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT