திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் இடப்பிரச்சினையில் ஒரு வாலிபரை வெட்டிக் கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையாபுரம் மெயின் தெருவில், முகர்ஷினி சூப்பர் மார்க்கெட் அருகே நேற்று (9.10.2026) காலை சுமார் 11.40 மணியளவில், இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில், சுப்பையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்காளை (வயது 30) என்பவரை அவரது தாய் மாமாவான அதே பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லையா மகன் தாமஸ்பாண்டியன்(39) மற்றும் அவரது மச்சினரான வீராணம் பகுதியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் அஜீத்குமார்(28) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த முத்துக்காளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி.யும், தற்போது திருநெல்வேலி ஊரக உட்கோட்டப் பொறுப்பிலும் உள்ள சதீஷ் கண்ணன், மானூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில், இடப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 25.8.2026 அன்று இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்சொன்ன அரிவாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மானூர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் பாண்டியன், அஜீத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.