கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஒரே வளாகத்தில் பல அரசு பள்ளிகள்...15 ஆண்டுகளாக நீடிக்கும் விசித்திர நிலை

ஒரே வளாகத்தில் பல பள்ளிகள் தனித்தனியாக இயங்குவதால் மனிதவளம் வீணடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஒரே வளாகத்தில் பல பள்ளிகள் செயல்படுவதால் மனிதவளம் வீணடிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

தமிழகத்தின் பல்வேறு கல்வி மாவட்டங்களில் ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் கல்வி மாவட்டத்தில் 8 பள்ளிகளும், தஞ்சாவூரில் 5 பள்ளிகளும், கள்ளக்குறிச்சியில் 3 பள்ளிகளும், ஓசூரில் 3 பள்ளிகளும் உள்பட 25-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.

மனிதவளம் வீணடிக்கப்படும் சூழல்

இதனால் ஒரே வளாகத்தில் செயல்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஒரே வளாகத்தில் பல பள்ளிகள் தனித்தனியாக இயங்குவதால் மனிதவளம் வீணடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புனரமைப்பு பணியால் ஏற்பட்ட மாற்றம்

கடந்த ஆண்டுகளில் சில பள்ளிகள் புனரமைப்பு பணிகள் காரணமாக அருகாமையில் உள்ள இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகும் அந்த பள்ளிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்றப்படாமல், ஒரே வளாகத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக குறைவான மாணவர் எண்ணிக்கையுடன் ஒரே வளாகத்தில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரே பள்ளியாக செயல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிர்வாகச் செலவுகளை குறைப்பதுடன், தேவையான பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மாற்றி அமைத்து மனிதவளத்தை முறையாக பயன்படுத்த முடியும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT