சென்னை,
மக்களை மதிக்காமல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் மரகதம் குமரவேல் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
அதையே தான் நாங்களும் சொல்கிறோம் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரத்தில் நீங்கள் கூறியது போல, கடந்த 5 வருடங்களாக மதுராந்தகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல் , தனது தொகுதிக்காக எதையும் செய்யவில்லை. ரோடு போட்டதாக கணக்கு காட்டியுள்ளார், ஆனால் ரோடு இல்லை. தண்ணீர் வசதி செய்து கொடுத்ததாக கணக்கு காட்டியுள்ளார் ஆனால் தண்ணீர் வரவில்லை. மின் இணைப்புகள் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் ஆனால் கரண்ட் வேறு எங்கோ சென்று விட்டது.
ஆக, நியாயப்படி பார்த்தால் பட்டவர்த்தனமாக இத்தனை ஊழல் செய்த மரகதம் குமரவேல் மீது, உங்கள் அரசு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த 5 வருடங்களில் மதுராந்தகம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 15 கோடி ஆண்டுக்கு ரூ.3 கோடி வீதம் என்ன ஆனது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த 5 வருடங்களில் அவர் தொகுதியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், நீங்களோ மரகதம் குமரவேலை ஊர்வலமாக வண்டியில் ஏற்றி கொண்டு, அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது தெரிகிறதா உங்கள் கட்சியிலேயே ஆகப்பெரும் அரசியல் ஆச்சரியக்குறி நீங்கள் தான் என்று!
எது எப்படியோ மக்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், எம்.எல்.ஏ பதவியில் இருந்த 5 வருடங்களில் தனது தொகுதிக்கு எதுவும் செய்யாமல், மீண்டும் தன்னை நம்பி வாக்களித்த மக்களை உதாசீனப்படுத்துவது போல தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர் தான், மரகதம் குமரவேல். அப்படிப்பட்டவரை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மட்டும் அவர் மக்களுக்கு இனி என்ன நல்லது செய்துவிட போகிறார்?
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.