தமிழக செய்திகள்

திருவிழாவில் பக்தர்கள் இழுத்தபோது மாரியம்மன் கோவில் தேர் சாய்ந்து வீடு மீது விழுந்ததால் பரபரப்பு

சாலையின் வளைவு பகுதியில் சென்றபோது தேர் திடீரென சாய்ந்து, ஒரு வீட்டின் மீது விழுந்தது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அங்குள்ள சாலையின் வளைவு பகுதியில் சென்றபோது தேர் திடீரென சாய்ந்து, ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை சேதமானது. அந்த சமயத்தில் வீட்டிலும், அதன் அருகிலும் யாரும் இல்லாததால் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேர் சரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், ஒரு மணி நேரம் போராடி கயிறு மூலம் தேரை மீட்டனர். அதன் பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.