சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கவிருக்கின்ற 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கு, 12.02.2026, வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள "அம்மா மாளிகை"-யில் உள்ள கூட்டரங்கில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய இடைக்கால குழுவின் (Adhoc Committee) ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் என்.பால் வசந்தகுமாரின் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெறவுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 1,417 நபர்களில் 1,395 நபர்களுக்கு விரைவு அஞ்சல் மூலமும் மற்றும் ஒரு நபருக்கு நேரிலும் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. 21 நபர்கள் அறிவிப்பினை பெற மறுத்து விட்டார்கள்.
மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்க 06.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தனியே ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகள் துறையால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆறு நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் துறையால் சான்று வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை மெரினா கடற்கரை 4 திட்டப் பகுதிகளில் மொத்தமாக 300 கடைகள் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட உள்ளது. அவற்றில் உணவு வகைப்பாட்டிற்கு 100 வியாபாரிகளும், அலங்கார மற்றும் பரிசுப் பொருட்கள் வகைப்பாட்டிற்கு 100 வியாபாரிகளும் மற்றும் பொம்மை பொருட்கள் வகைப்பாட்டிற்கு 100 வியாபாரிகளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிற்கும் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
குலுக்கல், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 12.02.2026 அன்று கீழ்கண்டவாறு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
1) உணவு வகைப்பாட்டிற்கு - காலை 10.00 மணி
2) அலங்கார பொருட்கள் மற்றும் பரிசு பொருட்கள் வகைப்பாட்டிற்கு - பிற்பகல் 2.00 மணி
3) பொம்மை பொருட்கள் வகைப்பாட்டிற்கு – மாலை 4.30 மணி
பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் 5 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனுமதி சீட்டு வழங்கப்பட்ட நபர்கள் மட்டும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
குலுக்கல் தினத்தன்று குலுக்கல் நடைபெறும் பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம், “அம்மா மாளிகை” கூட்டரங்கில் நடைபெறவிருக்கும் குலுக்கல் ஒத்திகையினை ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் என். பால் வசந்தகுமார் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் இன்று (11.02.2026) நேரில் பார்வையிட்டனர்.
அறிவிப்பு பெற்ற வியாபாரிகள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் குலுக்கல் நடைபெறும் இடத்திற்குப் பார்வையிட அழைக்கப்படுகிறார்கள். மேலும், 4 இடங்களில் குலுக்கல் நடைபெறுவதை பார்வையிடும் வகையில் 4 எல்.இ.டி. திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.