திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் 
தமிழக செய்திகள்

மருதமலையில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம்.. எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் பங்கேற்பு

கந்த சஷ்டி விழாவின், ஏழாம் நாளான இன்று காலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

கோவை:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ டாக்டர் கனிமொழி சந்தோஷ் பங்கேற்று திரளான பக்தர்களுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ

இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின், ஏழாம் நாளான இன்று காலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்த ஆன்மிக நிகழ்வில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் கலந்துகொண்டு, திரளாகக் கூடியிருந்த பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

SCROLL FOR NEXT