சென்னை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில், அதிமுக சார்பிலும் தனது சார்பிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தென்னக மண்ணில் விடுதலைச் சுடரை ஏற்றி வைத்து, "ஜம்பூ தீவு பிரகடனம்" மூலம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்ற மாவீரர்கள்!. வளரி வீச்சால் வெள்ளையர் படையை அலறவைத்து, தங்களின் மதிநுட்பத்தாலும் இணையற்ற நிர்வாகத் திறனாலும் தாயகத்தைக் காத்து நின்ற தீரமிக்க மாமன்னர்கள்!
தமிழர்களின் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாய் விளங்கும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளான இன்று, அவர்களின் ஒப்பற்ற வீரத்தையும் உன்னதமான தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பிலும், எனது சார்பிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.