சென்னை,
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை தமிழக அரசு அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, "விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்" என்று முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.