திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபம் 
தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியர் குருபூஜை

அமைச்சர் டாக்டர் பிரபு தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியர் குருபூஜை நடைபெறுகிறது. விழாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மருதுபாண்டியர் குருபூஜை

சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர் கடந்த 1801-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந்தேதி இந்த மணிமண்டபத்தில் மருதுசகோதரர்கள் குருபூஜை அரசு சார்பில் நடந்து வருகிறது. இந்த விழாவில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை) 225-வது ஆண்டு குரு பூஜை திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை மணிமண்டபம் முன்பு தேசியக் கொடியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து அமைச்சர் டாக்டர் பிரபு தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

முன்னேற்பாடு பணிகள்

இதேபோல தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், அ.தி.மு.க. சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

SCROLL FOR NEXT