விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் ஒரு தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியை தொடங்கினர்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலாளர்கள் ஏராளமானோர் பட்டாசு ஆலையின் உள்ளே சிக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீட்பு பணி தொடங்கப்பட்ட பின்னரே விபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல்கள் தெரியவரும். சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தொடர்ந்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்துச் சிதறிய சம்பவம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.