பேட்டை,
நெல்லை அருகே காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகின.
நெல்லையை அடுத்த கல்லூர் அருகே வடுகம்பட்டியில் தனியார் காகித ஆலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென நாலாபுறமும் வேகமாக பரவியது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் பேட்டை, நெல்லை, டவுன், மற்றும் சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். இரவிலும் தீயணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாதால் இரண்டாம் நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 25 ஆயிரம் டன் பழைய காகித பண்டல்கள் எரிந்து நாசமாகின. மதிய நேரத்தில் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சீதபற்பநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை தாசில்தார் மாரிமுத்து குமார் சென்று பார்வையிட்டனர். காகித ஆலையில் தீப்பிடித்ததால் வானுயுர எழும்பிய கரும்புகை நெல்லை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.