தமிழக செய்திகள்

சென்னையில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அக்டோபர் 15-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் - மாணிக்கம் தாகூர்

‘இந்தியா’ கூட்டணியில் கைகோர்த்துள்ள தவெக-வை மனப்பூர்வமாக வரவேற்கிறோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சென்னை,

வரும் அக்டோபர் 13 மற்றும் 14-ல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “ஜனநாயகத்தைக் காப்போம்” கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

டெல்லியில் 21 எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் எடுத்த முடிவின் தொடர்ச்சியாக, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்கப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைந்து நிற்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெரும் வலிமையையும் அளிக்கிறது.

பாஜக - ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணியில் கைகோர்த்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த முற்போக்கான முடிவை முன்னெடுத்த த.வெ.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான சி. ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எஸ்.ஐ.ஆர். திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தையும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் வன்மையாகக் கண்டித்தோம்; அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினோம்!

இச்சதியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், வரும் அக்டோபர் 13 மற்றும் 14-ல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “ஜனநாயகத்தைக் காப்போம்” கண்டன ஆர்ப்பாட்டங்களையும், உச்சக்கட்டமாக அக்டோபர் 15 அன்று சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதென முடிவு செய்தோம்.

இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன்; தோழமைக் கட்சித் தலைவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஐயுஎம்எல் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், சிபிஐ(எம்-எல்) மத்தியக்குழு உறுப்பினர் ஏ. சந்திரமோகன்; காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் அமைச்சர் விஸ்வநாதன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, பிரவீண் சக்கரவர்த்தி எம்.பி., சசிகாந்த் செந்தில் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ்; சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினர் என். குணசேகரன், சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, மதிமுக அமைப்புச் செயலாளர் எஸ். குருநாதன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புதிய தோழர்களின் வருகையுடன் ‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் முழு ஒற்றுமையுடன் உறுதியாகப் பயணிக்கிறோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT