தமிழக செய்திகள்

மகப்பேறு உயிரிழப்புகள்; தீர்வு காண தமிழ்நாடு வந்த உ.பி. அதிகாரிகளை வரவேற்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரசவத்தின்போது அல்லது பிரசவம் முடிந்து 42 நாட்களுக்குள் உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையை வைத்து ‘மகப்பேறு இறப்பு விகிதம்’ கணக்கிடப்படுகிறது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சம் பிரசவத்திற்கு 140 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

இந்த நிலையில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது குறித்து தீர்வு காண்பதற்காக, உத்தரப் பிரதேச திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். மகப்பேறு சிகிச்சை தொடர்பாக தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்த உத்தர பிரதேச அதிகாரிகளை வரவேற்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.

மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.