சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தி பின்வருமாறு;
உலகெங்கிலும் வாழுகின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்த பக்ரீத் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். தமிழகத்தில் முஸ்லிம் பெருமக்கள்,மற்ற மதத்தினருடன் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்வது மிகவும் சிறப்பு. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் புனித பக்ரீத் திருநாள், மனிதகுலம் ஒன்றுபட்டு அன்புடனும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டிய அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
இஸ்லாமிய மக்களின் உயர்ந்த விழுமியங்களான தன்னலமற்ற தியாகம், ஏழை எளியோரின் நலனில் அக்கறை, அன்பு, பரிவு மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நம் சமூக வாழ்வை மேலும் வளப்படுத்தும் பெரும் பண்புகளாகும். இந்த உயர்ந்த எண்ணங்கள் அனைவரின் மனதிலும் வேரூன்றி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகமாக தமிழகம் தொடர்ந்து திகழ வேண்டும்.
பக்ரீத் திருநாள் நமக்கு அளிக்கும் செய்தி, மனிதர்களை இணைக்கும் அன்பும், ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் மனப்பான்மையும் தான். சமூக நல்லிணக்கத்தையும் மத நல்லுறவையும் காக்கும் பணியில் நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற தன்மையையும், ஒற்றுமையையும் உயர்வாக மதித்து வருகிறது. அந்த நல்லிணக்க மரபு என்றும் நிலைத்திருக்க இந்த புனித நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
இந்த இனிய திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியமும் நலனும் நிறையட்டும். உங்கள் வாழ்வில் அமைதியும் வளமும் பெருகட்டும். அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் தமிழகமெங்கும் என்றும் நிலைக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.