சென்னை,
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டின் மூலம் 'இ.ஓ.எஸ். 5' எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.