சென்னை,
மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரத்துடன் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று!
சிவகங்கை மண்ணின் வீரச் சின்னங்களாகத் திகழ்ந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள், அந்நிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்தவர்கள். அவர்களின் அஞ்சா நெஞ்சமும், தாய்மண் மீதான பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.
தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வீர வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்!
வீர மருது சகோதரர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.