சென்னை,
நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளி திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு பட்டாசுகளை வெடித்து, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.