கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு நிறையட்டும் - எல்.முருகன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

உலகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் உறவுகளுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

விசுவாவசு வருடம் முடிந்து, பராபவ வருடம் நாளை பிறக்கிறது. புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளுடன் கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்! மனநிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக இவ்வாண்டு அமையட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

மலர இருக்கும் பராபவ ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி நிறையட்டும். எண்ணங்கள் ஈடேறுவதுடன் அனைவரின் முயற்சிகளும் வெல்லட்டும். மக்களிடம் வெற்றிகள் கைகூடட்டும், மனங்களில் புன்னகை பூக்கட்டும். மக்களுக்கு வாழ்வில் புதிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும் மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரட்டும்.

பல்லாண்டு காலமாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அதனை வேறு நாளுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டு தமிழ்ப் புத்தாண்டை மறைக்கப் பார்த்தது. ஆனால், உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் பன்னெடுங்காலமாக பதிந்து போன சித்திரை முதல் நாளை மாற்ற முடியுமா?

தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், தமிழகத்தின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை அழிக்க துடித்த திமுகவின் எண்ணம் ஈடேறவில்லை. மக்கள் என்றென்றும் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதல்-அமைச்சர், புரட்சித் தலைவி அம்மா என்று தமிழக மக்களால் போற்றப்படும் ஜெயலலிதா, சித்திரை முதல் நாளையே மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவித்து, திமுகவின் சதிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தமிழர்கள் விடுமுறையுடன் குதூகலமாக தமிழ்ப் புத்தாண்டை கூட கொண்டாட முடியாதபடி தடுக்க நினைத்தவர்கள் திமுகவினர்.

தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், புதிதாக பிறக்கும் புத்தாண்டில் தமிழகத்தை தற்போது சூழ்ந்து இருக்கின்ற இருண்ட ஆட்சி அகன்று புதிய ஆட்சி மலரப் போகிறது. வருகின்ற மே மாதம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசு, அலங்கோல திமுக ஆட்சியின் அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.

தமிழக மக்களுக்கு துன்பங்கள் நீங்கி அமைதியான, வளம்கொழிக்கும் நல்லாட்சி அமையும். உலகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். நல்லாட்சி மலரட்டும்…! தமிழகம் செழிக்கட்டும்…! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.