தமிழக செய்திகள்

மயிலாடுதுறை: ஆன்லைனில் போதை மாத்திரைகள் வாங்கிய 4 கல்லூரி மாணவர்கள் கைது!

பார்சல் மூலம் நண்பருக்கு போதை மாத்திரைகளை அனுப்பியதாக 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி, பார்சல் மூலம் நண்பருக்கு அனுப்பியதாக 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவலால் கண்காணிப்பு

செம்பனார்கோவில் பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி, கூரியர் மூலம் பார்சலில் அனுப்புவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கூரியர் நிறுவனத்தில் இருந்து பார்சல் ஒன்றை வாங்கிச் சென்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பார்சலைச் சோதனையிட்டனர். அதில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

தஞ்சை மாணவர்கள் 3 பேருக்கு தொடர்பு

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் தஞ்சை விளார் ரோடு விவேகானந்தர் நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரஜேஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

மேலும், பிரஜேஷின் நண்பர்களான தஞ்சையைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி, அவற்றைப் பார்சல் மூலம் பிரஜேஷுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பிரஜேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் தஞ்சை ஸ்ரீநகர் காலனி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிபிரசன்னா (19), தஞ்சை தொம்பன்குடிசை வண்டிக்கார தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் யஷ்வந்த் (19), தஞ்சை பனங்காட்டைச் சேர்ந்த வடிவேல் மகன் ராகுல் என்ற வீரநாதன் (19) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

200 போதை மாத்திரைகள் பறிமுதல்

விசாரணைக்குப் பிறகு பிரஜேஷ், ஹரிபிரசன்னா, யஷ்வந்த், வீரநாதன் ஆகிய 4 பேரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 200 போதை மாத்திரைகளையும் தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் மேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா, செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT