மாநகராட்சி தூய்மை பணிகளை மேயர் இந்திராணி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர், நகரை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, மதுரை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் குறைகளை கேட்க ஒவ்வொரு மண்டலத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு மண்டலத்தில் மேயர் இந்திராணி, நேரடியாக பங்கேற்று மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த கூட்டத்தில் சொத்து வரி பெயர் மாற்றம்-திருத்தம் ஆகிய மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன. இந்த குறைத்தீர்க்கும் கூட்டம் தவிர, மக்களிடம் இருந்து 24 மணி நேரமும் புகார்களை பெற 7871661787 என்ற குறைத்தீர்க்கும் எண்ணை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்துள்ளார்..
இந்த எண்ணுக்கு வரும் புகார்களை மேயர் நேரடியாக ஆய்வு செய்து தினமும் நடவடிக்கை எடுக்கிறார். இந்த எண் மூலம், இதுவரை 15 ஆயிரத்து 885 புகார்களை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 14 ஆயிரத்து 905 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உள்ளன.
அதுதவிர மேயர் இந்திராணி, தினமும் மாநகராட்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன்படி நேற்று ஒரே நாளில் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும், தொடங்கி வைத்தார். மாநகராட்சி 43-வது வார்டு வைகை தென்கரை பகுதி குருவிக்காரன் சாலை அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் சலவை கூடம் கட்டப்பட்டு உள்ளது. இதை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார். அதில் பூமிநாதன் எம்.எல்.ஏ., நகர் பொறியாளர் அரசு, மண்டல தலைவர்கள் முகேஷ் சர்மா, சரவண புவனேஸ்வரி கலந்து கொண்டனர். அதன்பின் மேயர், வைகை கரையில் மரக்கன்றுகள் நட்டார்.
திடீர் ஆய்வு
அதன் தொடர்ச்சியாக 86-வது வார்டு வில்லாபுரம் மெயின்ரோடு பகுதியில் ரூ.13.73 லட்சம் செலவிலும், 88-வது வார்டு அனுப்பானடியில் ரூ.3.36 லட்சம் செலவிலும் தார்சாலை பணியை மேயர் தொடங்கி வைத்தார். வில்லாபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீரென்று சென்றார். அங்கு நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள வருகை பதிவுகளை ஆய்வு செய்து, நோயாளிகளை கனிவாக கவனிக்க வேண்டும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்பின் மேயர், குருவிக்காரன் சாலை, கே.கே.நகர் ரவுண்டானா பகுதிகள், கோரிப்பாளையம், கலெக்டர் அலுவலக சாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மாவட்ட நீதிமன்ற வளாகம், ராஜா முத்தையா மன்றம் சந்திப்பு, அரசு ஆஸ்பத்திரி பகுதிகள், அவனியாபுரம் பிரதான சாலை பகுதிகளில் தூய்மைப குறித்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது நகரை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், தூய்மை பணிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.