சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் ரூபாய் 6.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44க்குட்பட்ட காந்திஜி 1வது தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 70.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார். இந்த மகளிர் உடற்பயிற்சிக் கூடமானது 1200 சதுர அடி பரப்பளவில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிக் கூடத்தினால் கக்கன்ஜி நகர், சத்யவாணி முத்து நகர், சாஸ்திரி நகர், மற்றும் கருணாநிதி சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறுவர்.
இதனைத் தொடர்ந்து, மாதவரம் மண்டலம், வார்டு-28க்குட்பட்ட தனசிங் மேஸ்திரி தெருவில் மேயரின் சிறப்பு நிதியிலிருந்து ரூபாய் 49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார். இந்த மகளிர் உடற்பயிற்சிக் கூடம் 988 சதுர அடி பரப்பளவில் உடற்பயிற்சி உபகரணங்கள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிக் கூடத்தினால் தனசிங் மேஸ்திரி தெரு, பாண்டியன் தெரு, உதயர் தோட்டம், வ.உ.சி. தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறுவர்.
பின்னர், வார்டு-33, டீச்சர்ஸ் காலனி, 5வது குறுக்குத் தெருவில் மேயரின் சிறப்பு நிதியிலிருந்து ரூபாய் 33.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார். இந்த மகளிர் உடற்பயிற்சிக் கூடமானது 732 சதுர அடி பரப்பளவில் உடற்பயிற்சி உபகரணங்கள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினால் டீச்சர்ஸ் காலனி 1வது தெரு முதல் 7வது தெரு வரை, சாரதி நகர், கணபதி நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 3,562 பொதுமக்கள் பயன்பெறுவர்.
இதனைத் தொடர்ந்து, மணலி மண்டலம், வார்டு-15க்குட்பட்ட மணலி புதுநகர், 80அடி சாலையில் மேயரின் சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார். இந்த மகளிர் உடற்பயிற்சி கூடம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 892 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
பின்னர், வார்டு-16, ஆண்டார்குப்பத்தில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 1.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தினை மேயர் திறந்து வைத்தார். இந்த இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அனைத்து வசதிகளுடன் சுமார் 750 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வார்டு-17, செட்டிமேடு பகுதியில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 1.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தினைத் திறந்து வைத்தார். இந்த நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் கொட்டில் அறை, மருத்துவ அறை, அறுவை சிகிச்சை அறை, பணியாளர் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுமார் 160 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
பின்னர், வார்டு-20, காமராஜர் சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூபாய் 83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகத்தினை மேயர் திறந்து வைத்தார். இந்த நவீன மாடுகள் காப்பகத்தில் சுற்றுசுவர், ஓவியம், பிளம்பிங், மின் பணிகள், நுழைவாயில் அமைத்தல், பெயர்ப் பலகை வைத்தல், கன்று கொட்டகை, பசுமைத் தரைக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், வார்டு-20க்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் மணலி, காமராஜ் சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் மார்வாடி மயானபூமி மற்றும் கிறிஸ்துவர் மயானபூமியினைப் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதற்காக மார்வாடி மற்றும் கிறிஸ்துவர் மக்கள் மேயருக்கு பொன்னாடை அணிவித்து, தங்களது நன்றிகளை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் (மாதவரம்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர்கள் நேதாஜி யு.கணேசன் (தண்டையார்பேட்டை), எஸ். நந்தகோபால் (மாதவரம்), ஏ.வி.ஆறுமுகம் (மணலி), நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயதாஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மோ.குணசுந்தரி, ச.நந்தினி, ஆ.இராஜேந்திரன், க.காசிநாதன், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.