தமிழக செய்திகள்

‘முதல்-அமைச்சர் விஜய்யிடம் மேயர் பிரியா நேரில் பேச வேண்டும்’ - பா.ஜ.க. வலியுறுத்தல்

மாநகராட்சி கூட்டத்தை நடத்த மேயர் பிரியா ஏற்பாடு செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னையில், தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சென்னையில் மாநகராட்சியின் சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி மேயர் பல முறை மாநகராட்சி கூட்டத்தை நடத்த கமிஷனரிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை.

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதுபோல் மேயர் பிரியா ஆணவம் பார்க்காமல் முதல்-அமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும். அதுதான் மாநகராட்சியின் மரபு.

ஜெயலலிதா 2-வது முறை முதல்-அமைச்சராக பதவியேற்ற போது, சென்னை மேயர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சி தலைவராக இருந்த பேராசிரியர் அன்பழகனும் விழாவுக்கு சென்று 6-வது வரிசையில் அமர்ந்தனர். சுனாமி பாதிப்பின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நிதி கொடுக்க வந்தார். 50 பேர் நடுவில்தான் அவரை உட்கார வைத்தார்கள்.

அவர் வரிசையில் நின்றுதான் பார்த்தார். அப்போது மேயராக பொறுப்பில் இருந்த நானும் சென்றிருந்தேன். எனவே அவரைப்போல் மேயர் பிரியாவும் உடனடியாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எந்த வேலையும் நடக்காமல் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். மேயர் பிரியா முதல்-அமைச்சரை பார்க்க மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.