செங்கல்பட்டு,
பீகார் மாநிலம், தானா பகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்குமார் ராய், இவரது மகள் ரியாஸ்ராய் (வயது 24). இவர் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள நெல்லிக்குப்பத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் படித்து வரும் தோழிகள் 2 பேருடன் தங்கி இருந்தார். நேற்று காலை ரியாஸ் ராய் தோழிகளிடம் "நான் கல்லூரிக்கு வரவில்லை. மனது சரியில்லை” என்று கூறினார். இதையடுத்து தோழிகள் இருவரும் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து அவர்கள் திரும்பி வந்தபோது அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் ரியாஸ்ராய் திறக்கவில்லை. அவரது செல்போன் அழைப்பும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் இதுகுறித்து காயார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் ரியாஸ் ராய் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி ரியாஸ் ராயின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து இருப்பது குறித்து பீகாரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி ரியாஸ் ராய் 2-ம் ஆண்டு தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வருவது குறித்து பெற்றோரிடம் செல்போனில் பேசி உள்ளார். ஆனால் அவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று கூறி நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
எனினும் மாணவியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவரிடம் கடைசியாக பேசியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடன் படித்து வரும் மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.