தமிழக செய்திகள்

மதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்கிறார்களா ? வைகோ பதில்

சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க.வுக்கு சட்டசபைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதில் 2 பேர் வெற்றி பெற்றனர்.தொகுதி உடன்பாட்டின்போது தி.மு.க.-ம.தி.மு.க. இடையே சுமூக உறவு ஏற்படவில்லை. அப்போதே ம.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு பொதுச் செயலாளர் வைகோ முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து பல்வேறு கட்சிகளில் இருந்து த.வெ.க.வுக்கு படையெடுத்தார்கள்.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்யை இன்று பிற்பகல் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறியதாவது:

மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக யூகங்களை நீங்கள்தான் பேசுகிறீர்கள். சில பத்திரிகைகள், விவாதங்களில் கடுமையாக பேசுகிறார்கள். யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. இரண்டு பேர் ராஜினாமா செய்ய மாட்டார்களா? என்று கேட்கிறீர்கள். யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது. அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியாது. விஜய் எளிமையாக, இயல்பாக இருக்கிறார் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுடன் பயணிப்பீர்களா? அல்லது தவெகவுடன் இணைவீர்களா? என்று கேட்கிறீர்கள். பொதுக்குழு சகல கோணத்திலும் இதுபற்றி கருத்துகள் பரிமாறப்பட்டு அங்கு என்ன நிலைப்பாடு என்று அங்குதான் முடிவு தெரியும்" என்றார்.