சென்னை,
சென்னை தண்டையார்பேட்டை, கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார். அப்போது மேம்பால பணிகள் தற்போது 60 சதவீதம் முடிவடைந்து, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெற்று வரும் பயோ-மைனிங் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
ராயபுரம் மண்டலத்தில் உள்ள நவீன மாடுகள் காப்பகத்தைப் பார்வையிட்ட அவர், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், காப்பகங்களைச் சிறப்பாகப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையை ஆய்வு செய்த ககன்தீப் சிங் பேடி மெரினா காமராஜர் சாலையில் மையத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் விக்டோரியா பொது அரங்கம், வில்லிவாக்கம் ஏரி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.