நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் நீலகிரியை சேர்ந்தவர்களை விட, தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் ஊட்டிக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை நீலகிரி மாவட்டத்திற்குள் ஊட்டி நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மேல் படுக்கையில் இருந்த மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார்.
உடனே மற்ற பயணிகள் எழுந்து பார்த்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த நபர் வெள்ளை நிற ஆடை அணிந்து இருந்தார் என்று மாணவி அடையாளம் கூறினார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரோனியா மற்றும் போலீசார் வீனா, சவிதா ஆகியோர் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஆம்னி பஸ்சில் மாற்று டிரைவராக வந்த மதுரையை சேர்ந்த வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த கார்த்திகேயன் (வயது 40) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் அவரை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பிடித்து, ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் கார்த்திகேயனை கைது செய்தனர். கைதான கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.