தமிழக செய்திகள்

"நகை கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கும், எனது தந்தைக்கும் தொடர்பு இல்லை" - நிஷாந்த்

மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்துக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

நகை கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கும், தனது தந்தைக்கும் தொடர்பு இல்லை என்று கைதான யூடியூபர் நிஷாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடையில் கொள்ளை

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில், தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடையானது. சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. கடந்த 12-ந்தேதி அதிகாலையில், கடைக்குள் புகுந்த கொள்ளையன். கடையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றான்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் நிஷாந்த் (வயது 25) என்று தெரியவந்தது.

இன்ஸ்டா பிரபலம்

வெளியூருக்கு அவன் தப்ப உதவி செய்ததுடன், இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி (23), நிஷாந்தின் தந்தை சுரேஷ் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில், முதற்கட்டமாக 5.5 கிலோ தங்க. வைர நகைகளை போலீசார் மீட்டனர். அதன்பின்னர் 2 பேரையும், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையே, கொள்ளையன் நிஷாந்தை தர்மபுரி அருகே, அதியமான் கோட்டை பகுதியில் ஆம்னி பஸ்சில் சென்றபோது போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவனிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி, கொள்ளையடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற நகைகளையும் மீட்டனர்.

மத்திய சிறை

இதனை தொடர்ந்து இரவு முழுவதும் விசாரணை நடத்தி, பல்வேறு தகவல்களை சேகரித்தனர். அதன்பின்னர், நேற்று முன்தினம் அதிகாலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

நீதிபதி லட்சுமி பிரியா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் காண்பித்தனர். அதன்பின்னர், நிஷாந்தை டிசம்பர் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர்பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நிஷாந்தை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மீனாட்சிக்கு தொடர்பு இல்லை

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையிபோது, நகை கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கும், தனது தந்தைக்கும் தொடர்பு இல்லை என்று யூடியூபர் நிஷாந்த் தெரிவித்தார்.

அப்போது கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என இப்போது பேசக்கூடாது என்றும், போலீஸ் கஸ்டடி குறித்த மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடைபெறுகிறது என்றும் நிஷாந்திடம் நீதிபதி பதில் அளித்தார்.

இதனிடையே நிஷாந்த் சுயநினைவுடன் பலநாட்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை செய்துள்ளார் என்றும், மதுரை நகை கொள்ளை முக்கியமான வழக்கு, கஸ்டடியில் கட்டாயம் விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிபதி அனுமதி

இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ராஜபிரபு அனுமதி அளித்துள்ளார்.

நிஷாந்தை துன்புறுத்த கூடாது, வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக காவல்துறை 5 நாட்கள் கேட்ட நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT