மதுரை,
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மற்றும் அவனது காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மீனாட்சியை போலீசார் அழைத்துச்சென்றபோது, அவரிடம் பெண் ஒருவர், தைரியமாக இரு... நாங்கள் இருக்கிறோம்... நீதிபதியிடம் நடந்ததை கூறு...என்று சத்தமாக கூறுவது போன்ற வீடியோ பரவி வருகிறது.
அந்த பெண், மீனாட்சியின் தாயார் இந்துமதி என தெரியவந்தது. அவரும் மகளைப் போலவே சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். இதற்கிடையே, கொள்ளை சம்பவம் தொடர்பாக இந்துமதியிடமும் போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
இந்துமதி, இன்ஸ்டாகிராமில் 'இந்துவின் பயணம்' என்ற பெயரில் ஒரு வலைத்தள பக்கத்தை நடத்தி வருகிறார். மகளை போலவே இவரும் தொடர்ந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தவர். மசாலா பொருட்கள், கேக் உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வந்தார். கோவில்கள் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து அதனையும் வெளியிட்டார்.
தீபாவளியையொட்டி, விளம்பர வீடியோக்களிலும் நடித்தார். அதில், கழுத்து நிறைய நகைகளை அணிந்தபடி, வேறொரு நகைக்கடையின் சலுகைகள் குறித்து பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதுபோல், தமிழக அரசின் ஆவின் பாலில் மருந்து வாசனை வீசுவதாகக்கூறி, முதன்முதலில் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான் என கூறப்படுகிறது.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. அந்த சர்ச்சை மட்டுமின்றி, இந்துவின் பக்கத்தில் உள்ள மற்ற வீடியோக்களும் இப்போது சந்தேக கண்களோடு பார்க்கப்படுகின்றன. மகள் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் சூழலில், தாயார் வேறு ஒரு நகைக்கடை விளம்பரங்களில் தோன்றியதும், அதிகப்படியான நகைகளுடன் ரீல்ஸ் போட்டதும் இப்போது விவாதப் பொருளாக மாறி உள்ளன. இவ்வாறு போலீசார் கூறினர்.