கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மீனவர்களின் நீண்டகால வாழ்வாதார போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்கள் அச்சமில்லாமல் மின்பிடி தொழிலை மேற்கொள்ள இலங்கை அரசுடன் பேசி ஒரு நிரந்தர தீர்வை காண, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததோடு அவர்கள் படகுகளை பறிமுதல் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.

ஒவ்வாரு நாளும் அச்சத்துடனே மீனவர்கள் மீன்பிடிக்க கூடிய சூழ்நிலைதான் தொடர்கிறது. மீனவர்கள் குடும்பங்கள் தினந்தோறும் கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் வருகையை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறார்கள். மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே முற்றிலுமாக நம்பியிருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு, தமிழக மீனவர்கள் நலனில் அக்கறையோடு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சமில்லாமல் மின்பிடி தொழிலை மேற்கொள்ள இலங்கை அரசுடன் பேசி ஒரு நிரந்தர தீர்வை காண, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டகால மீனவர்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT