தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

த.வெ.க. கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

த.வெ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவோடு நடந்து வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறாத 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

இதனால் த.வெ.க.வுக்கான ஆதரவை கம்யூனிஸ்டு கட்சிகள் எப்போது வேண்டுமென்றாலும் வாபஸ் பெறலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் த.வெ.க. ஆட்சிக்கு சிக்கலாக ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளும் திரைமறைவில் அரங்கேறி உள்ளன. இதுபற்றி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இளையராஜா (ஊத்தங்கரை), முஸ்தபா (மதுரை மத்தி) ஆகியோர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் போலீஸ் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மன்னார் குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

எம்.எல்.ஏ.க்கள் வருகை

முன்னதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அரசு இல்லமான பாமணி இல்லத்தில் இன்று (திங்கள் கிழமை) இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தற்போது நடைபெறும் கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். இதன்படி IUML எம்.எல்.ஏ.க்கள் ஷாஜகான், சையத் பரூக், மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், அமைச்சர் விஸ்வநாதன், அமைச்சர் ஆதவ் ஆதவ், அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் பாமினி இல்லம் வருகை தந்துள்ளனர். கூட்டணி கட்சிக்களில் விசிக எம்.எல்.ஏ. ஒருவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில்

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களி டம், அரசியல் ரீதியாகவும் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனைகளை வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

த.வெ.க.வை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள், துணை சபாநாயகர் மீது சர்ச்சைகள், புகார்கள் எழுந்திருந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த 11-ந்தேதி ஆலோசனை கூட் டம் நடத்தி இருந்தார். தற்போது அவர், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

SCROLL FOR NEXT